Saturday, 8 June 2013

திருவள்ளுவர் மன்றம் - திருப்பரங்குன்றம்


"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"



திருவள்ளுவர் மன்றம் - திருப்பரங்குன்றம்


1963ம் ஆண்டு திருப்பரங்குன்றம், கூடல்மலைத்தெருவில் திரு. கார். பாலன் அவர்களால் சிறியதாக தொடங்கப்பட்ட இந்த மன்றம், ஆண்டு தோறும் ஆண்டு தேர்விலே அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கி ஊக்குவித்துவருகிறது.

2002ம் ஆண்டுக்கு பின் காலஞ்சென்ற கல்வியாளர் நேர்த்தியான ஆசிரயர் கார்மேகம் சேர்வை அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 



திருவள்ளுவர் - திருக்குறள்
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம். அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.

வள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இன்றோடு 2039 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகள் இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான். எனவே நாம் இப்படி கருதலாம். வள்ளுவர் ஒரு தொன்மையான தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவர்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது. 

தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு மு.கருணாநிதி
• திரு மு.வரததாசனார்
• திரு சாலமன் பாப்பையா
• திரு பரிமேலழகர்
• திரு மணக்குடவர்

ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis



திருவள்ளுவர் மன்றம் - திருப்பரங்குன்றம்:

34, கார்மேகம் சேர்வை சந்து,  
கூடல்மலை தெரு, 
திருப்பரங்குன்றம், மதுரை - 625005

தொலைபேசி: 0452 2485039
அலைபேசி: 7200827594
மின்னஞ்சல்: rajagurukb@gmail.com